இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இலங்கை கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கைது...!

இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 Image Courtesy: AFP
 Image Courtesy: AFP
Published on

சிட்னி,

இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணியின் பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இருந்த இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ஆஸ்திரேலியா வந்த அவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடரின் இடையே குணதிலகாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கா குணதிலகா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிட்னி போலீசார் கூறுகையில்,

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சந்தித்துள்ளனர்.

அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, அனுமதி இன்றி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் சிட்னி போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சிட்னி போலீசார் குணதிலகாவை நேற்று கைது செய்தனர்.

கைது செய்து செய்யப்பட்ட தனுஷ்கா குணதிலகா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டி20 தொடரில் இருந்து வெளியேறி இலங்கை அணி தனுஷ்கா குணதிலகா இல்லாமலேயே சொந்த நாடு திரும்யுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com