இலங்கை வந்துள்ள இந்திய அணி வலுவானது: ரணதுங்கா விமர்சனத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம்

தற்போது இலங்கைக்கு வந்துள்ள இந்திய அணி, அவர்களின் சிறந்த அணி கிடையாது. இது 2-ம் தர இந்திய அணியாகும் என ரணதுங்கா விமர்சித்து இருந்தார்.
இலங்கை வந்துள்ள இந்திய அணி வலுவானது: ரணதுங்கா விமர்சனத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம்
Published on

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 13 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. விராட் கோலி தலைமையிலான மூத்த வீரர்கள் கொண்ட இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்ககேற்கச் சென்றுள்ளது.

அதேசமயம், அனுபவ வீரர் ஷிகர் தவான் தலைமையில் பெரும்பாலும் சர்வதேச அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய பி அணிக்கு எதிராக நாம் நமது சிறந்த அணியை விளையாட வைக்கக்கூடாது என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக தற்போது இலங்கைக்கு வந்துள்ள இந்திய அணி, அவர்களின் சிறந்த அணி கிடையாது. இது 2-ம் தர இந்திய அணியாகும். தரவரிசையில் இலங்கை பின்தங்கி இருக்கலாம். ஆனால் ஒரு கிரிக்கெட் தேசமாக எங்களுக்கு என்று தனி அடையாளமும், கவுரவமும் உள்ளது. இந்திய பி அணிக்கு எதிராக நாம் நமது சிறந்த அணியை விளையாட வைக்கக்கூடாது.

என்னை பொறுத்தவரை, 2-ம் தர இந்திய அணி இங்கு வந்து விளையாட இருப்பது இலங்கை கிரிக்கெட்டை அவமதிக்கும் செயலாகும். டெலிவிஷன் உரிமம் மூலம் கிடைக்கும் பணத்துக்காக இதற்கு ஒப்புக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் செயல் கண்டனத்திற்குரியது. இந்திய கிரிக்கெட் வாரியம், மிகச்சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணியை இங்கிலாந்துக்கு (விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள்) அனுப்பி விட்டு பலவீனமான ஒரு அணியை இலங்கைக்கு அனுப்பி இருக்கிறது. இதற்கு எல்லாம் காரணமான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கண்டிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், இலங்கை வந்துள்ள இந்திய அணி பலவீனமானது அல்ல வலுவானது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது:-

ஷிகர் தவான் தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய அணி வலுவான அணி. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 20 வீரர்களில் 14 வீரர்கள் அந்நாட்டு தேசிய அணிக்காக பல்வேறு அனைத்து விதமான வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியவர்கள். இலங்கை வந்துள்ள இந்திய அணி வலுவானது, 2-ம் தரமான அணி அல்ல என்று தெரிவிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com