டி20 உலகக் கோப்பை: சிக்கந்தர் ராசா அதிரடியால் ஜிம்பாப்வே அணி 174 ரன்கள் குவிப்பு

இன்றைய நாளின் 2-வது போட்டியில் ஜிம்பாப்வே- அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
Image Tweeted By @ICC 
Image Tweeted By @ICC 
Published on

ஹோபர்ட்,

8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதம் 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அதிர்ச்சி அளித்தது.

இதை தொடர்ந்து நடைபெற்று வரும் 2-வது போட்டியில் ஜிம்பாப்வே- அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரெஜிஸ் சகாப்வா மற்றும் கேப்டன் கிரேக் எர்வின் களமிறங்கினர்.

ஜிம்பாப்வே அணி ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்பாக ரெஜிஸ் சகாப்வா டக் அவுட்டாக்கி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்லே 22 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அதற்கு அடுத்த ஓவரிலே கேப்டன் கிரேக் எர்வின் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

பின்னர் சீன் வில்லியம்ஸ் உடன் அனுபவ ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் வில்லியம்ஸ் நிதானம் காட்ட, சிக்கந்தர் ராசா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அயர்லாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் பவுண்டரி மழைகளை பொழிந்தார். தொடர்ந்து சீன் வில்லியம்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் சிக்கந்தர் ராசா அரைசதம் கடந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். இவரின் அதிரடியால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. 48 பந்துகளில் 82 ரன்கள் குவித்த சிக்கந்தர் ராசா, இன்னிங்சின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அயர்லாந்து அணியின் சார்பாக ஜோஷுவா 3 விக்கெட்களும், சிமி சிங் , மார்க் அடேர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதை தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com