டெஸ்ட் கிரிக்கெட்; அவர் சிறந்த வீரர் இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க - இந்திய வீரருக்கு ஆதரவு அளித்த கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். இந்திய அணியில் ரோகித் 14 ரன், சுப்மன் 34 ரன், ஸ்ரேயாஸ் 27 ரன், பட்டிதார் 32 ரன், அக்சர் 27 ரன், பரத் 17 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதில் சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் கடந்த 18 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திண்டாடி வருகிறார்.

குறிப்பாக இத்தொடரின் முதல் போட்டியில் 23, 0 ரன்களில் அவுட்டானதால் அணியிலிருந்து நீக்குமாறு ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள். இந்நிலையில் 2வது ஆட்டத்திலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் கூட முதல் 10 போட்டிகளில் தடுமாறியுள்ளார். எனவே கில்லுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று விமர்சகர்களுக்கு கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் காலிஸ் 22 என்ற சராசரியை மட்டுமே கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் அவர் இந்த விளையாட்டில் விளையாடிய மகத்தான வீரராக உருவெடுத்தார். சுப்மன் கில் மீண்டு வருவதற்கான நேரத்தை கொடுங்கள் ப்ளீஸ். அவர் நல்ல வீரர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com