இலங்கை வீரர்களின் வருகை பெங்களூரு அணிக்கு கூடுதல் பலம் கேப்டன் கோலி சொல்கிறார்

இலங்கை வீரர்களின் வருகை பெங்களூரு அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என கேப்டன் கோலி சொல்கிறார்.
இலங்கை வீரர்களின் வருகை பெங்களூரு அணிக்கு கூடுதல் பலம் கேப்டன் கோலி சொல்கிறார்
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை அபுதாபியில் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணியினர் வழக்கமான சிவப்பு நிற சீருடைக்கு பதிலாக நீல நிற உடை அணிந்து விளையாட உள்ளனர். ஆட்டம் முடிந்ததும் இந்த சீருடை ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய சீருடையை அறிமுகப்படுத்திய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பின்னர் கூறியதாவது:-

எங்கள் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்று வீரர்களாக சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலாவது பகுதியில் ஆடிய கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இலங்கை பவுலர்கள் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா இலங்கையில் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். அங்குள்ள ஆடுகளங்களும், அமீரகத்தில் உள்ள ஆடுகளங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். அதனால் இங்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களது திறமை அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். சில வீரர்கள் விலகினாலும் நாங்கள் வலுவாக இருப்பதாகவே உணர்கிறோம். புதிய வீரர்கள் வருகை, எங்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. முதல் பாதியில் எப்படி விளையாடினோமோ அதே வேட்கை, மனஉறுதியுடன் 2-வது கட்டத்திலும் விளையாட வேண்டியது முக்கியம்.

இவ்வாறு கோலி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com