

துபாய்,
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் உள்ளார். அவருடன் முன்பு தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார். சொந்த நாட்டு அணிக்கு எதிராக எதிர்முகாமில் பணியாற்றும் ஹைடன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், இது ஒரு வித்தியாசமான உணர்வை தருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் போராட்டமிக்க வீரராக நான் 20 ஆண்டுகள் இருந்துள்ளேன். இது ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்கள் எப்படி ஆடுவார்கள் என்பதை அறிந்து கொள்ளும் சாதகத்தை எனக்கு தந்திருக்கிறது. அத்துடன் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கலாசாரத்தையும் அறிவேன். என்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது உணர்வுபூர்வமாகவும், மனதளவிலும் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால் அற்புதமான பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நானும் பங்கெடுத்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
இந்த உலக கோப்பையில் முதல் ஆட்டத்தை இந்தியாவுக்கு எதிராக விளையாடியதுதான் உச்சக்கட்டம். வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி இருந்தது. அந்த நெருக்கடி ஆஷஸ் போட்டிக்கு நிகரானது. அப்படிப்பட்ட சூழலை பாகிஸ்தான் வீரர்கள் பொறுமையாகவும், நம்பிக்கையுடனும் திறம்பட கையாண்டனர். அந்த வெற்றி தான் எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது. இந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுலின் விக்கெட்டை வீழ்த்திய ஷகீன் ஷா அப்ரிடி வீசிய அந்த பந்து, நான் பார்த்தமட்டில் மிகச்சிறந்த பந்து வீச்சில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.