மகளிர் டி20 உலகக்கோப்பை நாளை தொடக்கம்; முதல் ஆட்டத்தில் வங்காளதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் மோதல்

நாளை நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @BCBtigers
Image Courtesy: @BCBtigers
Published on

ஷார்ஜா,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இங்கிலாந்தில் நடந்த முதல் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் நடந்த தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 தடவை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) உலகக்கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன. இந்நிலையில், 9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 20-ந் தேதி வரை துபாய், ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறுகிறது.

வங்காளதேசத்தில் நடைபெற இருந்த போட்டி அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது. டி20 உலகக்கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்படுள்ளன. அதன்படி ஏ பிரிவில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், பி பிரிவில், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் 'லீக்' சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 15-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. முதல் அரையிறுதி அக்டோபர் 17-ந் தேதியும், 2-வது அரையிறுதி 18-ந் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20-ந் தேதியும் நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய அணி இந்த போட்டியில் கலந்து கொள்கிறது. இந்நிலையில், இந்த தொடரில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம் - ஸ்காட்லாந்து (மாலை 3.30) அணிகள் மோத உள்ளன. அதைத்தொடர்ந்து நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை (இரவு 7.30) அணிகள் மோத உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com