‘அடுத்த ஆட்டத்தில் என்னை நீக்க வாய்ப்பு உள்ளது’ - ஆட்டநாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலிய வீரர் கவுல்டர்-நிலே பேட்டி

அடுத்த ஆட்டத்தில் தன்னை நீக்க வாய்ப்புள்ளதாக ஆட்டநாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலிய வீரர் கவுல்டர்-நிலே தெரிவித்துள்ளார்.
‘அடுத்த ஆட்டத்தில் என்னை நீக்க வாய்ப்பு உள்ளது’ - ஆட்டநாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலிய வீரர் கவுல்டர்-நிலே பேட்டி
Published on

நாட்டிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நாட்டிங்காமில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பரபரப்பான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 79 ரன்களுடன் தட்டுத்தடுமாறிய நிலையில் பவுலரான நாதன் கவுல்டர்-நிலே 92 ரன்கள் (8 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து வியப்பூட்டினார். அவரது அதிரடி உதவியுடன் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 289 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 273 ரன்களே எடுக்க முடிந்தது. வெற்றிக்கு பிறகு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் நாதன் கவுல்டர்-நிலே கூறியதாவது:-

நான் இவ்வளவு ரன்கள் எடுப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஒரு சில அவுட் வாய்ப்புகளில் இருந்து தப்பினேன். இந்த வகையில் எனக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. ஆனால் நான் ஒரு வேகப்பந்து வீச்சாளர். விக்கெட் வீழ்த்துவது தான் எனது பணி. ரன்கள் எடுப்பதற்காக அணியில் நான் சேர்க்கப்படவில்லை. அதை டாப் வரிசை வீரர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன். உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் 2 ஆட்டங்களிலும் எனக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் (ஜூன் 9-ந்தேதி) எனக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது தெரியவில்லை. என்னை நீக்கினாலும் ஆச்சரியப்படமாட்டேன். உலகத்தரம் வாய்ந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் (ஜாசன் பெரேன்டோர்ப் மற்றும் கேன் ரிச்சர்ட்சன்) வாய்ப்பின்றி வெளியில் உள்ளனர். இவ்வாறு கவுல்டர்-நிலே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com