

போட்செப்ஸ்ட்ரூம்,
9-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி தென்ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூமில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் அரைஇறுதியில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
லீக்கில் வேல்ஸ், ஜெர்மனி, மலேசியாவை போட்டுத்தாக்கிய இந்திய அணி, கால்இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை துரத்தியது. ஜூனியர் உலக கோப்பை ஆக்கியில் இந்தியா இறுதிப்போட்டிக்கு ஒரு போதும் முன்னேறியதில்லை. வரலாறு படைக்க இது அருமையான வாய்ப்பாகும்.
அதே சமயம் இதுவரை 43 கோல்கள் அடித்துள்ள நெதர்லாந்து ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் சூப்பர் பார்மில் உள்ளது. அதனால் இந்தியாவுக்கு கடுமையான போராட்டம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மற்றொரு அரைஇறுதியில் இங்கிலாந்து-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.