ஆசிய துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற மேலும் 3 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஆசிய துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற மேலும் 3 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ஆசிய துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற மேலும் 3 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
Published on

தோகா,

14-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் மூன்று நிலை ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் 449.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கொரியாவின் கிம் ஜோங்யுன் (459.9 புள்ளி) தங்கப்பதக்கமும், சீனாவின் ஜோங்காவ் ஜாவ் (459.1 புள்ளி) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.

பதக்கம் வென்றதன் மூலம் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான பிரதாப் சிங் தோமர் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர்கள் அன்கட் விர் சிங் பஜ்வா, மைராஜ் அகமது கான் இருவரும் டாப்-2 இடங்களுக்குள் முன்னேறி தலா 56 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இதையடுத்து கொண்டு வரப்பட்ட ஷூட்-ஆப் முடிவில் பஜ்வா 6-5 என்ற புள்ளி கணக்கில் அகமது கானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அகமது கானுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இருவரும் ஒலிம்பிக் வாய்ப்பையும் பெற்றனர். இவர்களையும் சேர்த்து ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்தியா இதுவரை 15 கோட்டா பெற்றுள்ளது.

முந்தைய எந்த ஒலிம்பிக்கிலும் இல்லாத அளவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் மட்டும் சாதனை எண்ணிக்கையாக மொத்தம் 15 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா சார்பில் 12 பேர் களம் கண்டதே அதிகபட்சமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com