

டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலால் தள்ளி வைக்கப்பட்டு இ்ந்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் 15 ஆயிரம் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள். இதுதவிர, பயிற்சியாளர்கள், நடுவர்கள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் விளம்பரதாரர்கள் என 75 ஆயிரம் பேர் வரை வரக்கூடும் என்று ஜப்பானில் இருந்து வெளிவரும் சாங்கெய் ஷிம்பன் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை காண வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட 5 அமைப்புகள் கலந்து கொண்டன.
இந்த கூட்ட முடிவில், சர்வதேச பார்வையாளர்களை ஒலிம்பிக் போட்டிகளை காண அனுமதிப்பது இல்லை என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதனால், முன்பே டிக்கெட்டுகளை வாங்கிய சர்வதேச பார்வையாளர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என ஜப்பானிய போட்டி அமைப்பு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.