

புதுடெல்லி,
15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு வீரர் வயது அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
போட்டியின் நிறைவு நாளான நேற்று முன்தினம் நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது வயது அதிகம் பிரச்சினையால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இளம் வீரர் மேடையில் இருந்த பிரிஜ் பூஷன் சரண்சிங்கிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த பிரிஜ் பூஷன் அந்த இளைஞரின் கன்னத்தில் இரண்டு முறை பளார் என்று அறைந்தார். எதிர்பாராத அறையால் நிலைகுலைந்த அந்த இளைஞரை சக நிர்வாகிகள் சமாதானப்படுத்தி வெளியேற்றினார்கள்.
அந்த இளம் வீரர் உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஷனுக்கு சொந்தமான அகாடமியில் பயிற்சி பெற்றவர் ஆவார். அந்த தொகுதியில் இருந்து தான் பிரிஜ் பூஷன் சரண்சிங் பாரதீய ஜனதா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.