‘ஹஜ்’ புனித யாத்திரை

உலகின் முதல் இறையில்லமான ‘கஅபா’ சவுதி அரேபியாவின் மக்கா நகரில், முதல் நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டது.
‘ஹஜ்’ புனித யாத்திரை
Published on

லகின் முதல் இறையில்லமான கஅபா சவுதி அரேபியாவின் மக்கா நகரில், முதல் நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. காலம் செல்லச் செல்ல பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்த அவ்விடத்தைத் தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களுடன் சேர்ந்து இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளையின்படி கட்டினார்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் என்பது, முஸ்லிம்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் இந்த இறையில்லத்திற்கு ஒரு முறையேனும் சென்று வருவதாகும். ஏழ்மையில் வாடும் மக்களுக்கு இது கட்டாயக் கடமை இல்லையென்றாலும், வசதி படைத்த மனிதர்கள் தவறாமல் இந்தக் கடமையை துல் ஹஜ் மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்.

எல்லாக் கடமைகளும் இறைவனுக்காகவே ஆற்றப்பட வேண்டுமென்றாலும் ஹஜ்ஜில் இறைவனை மட்டுமே முழுமையாகச் சார்ந்து அவன் கட்டளைக்கு முழுமையாகச் செவி சாய்த்த ஒரு மனிதர் மற்றும் அவர் தம் குடும்பம் செய்த தியாகம் பிணைக்கப்பட்டுள்ளது. அவர்தாம் நபி இப்ராஹிம் (அலை) அவர்களாவர்.

நபியவர்களின் சிறப்பினை நம் நினைவில் வைப்பதற்காகவே ஐவேளைத் தொழுகைகளையும் நிச்சயமாக என்னுடைய வணக்கமும், தியாகமும், எனது வாழ்வும், மரணமும் அகிலத்தின் அதிபதியான அந்த இறைவன் ஒருவனுக்கே என்ற அவர்களது பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கிறோம்.

இதனாலேயே இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் பனிரெண்டாம் மாதமான ஹஜ்ஜின், பத்தாம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை ஹஜ் பெருநாள் என்றும் தியாகத் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.

ஹஜ்ஜின் பெரும்பாலான சடங்குகள் நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நமக்கு நினைவுபடுத்தி அன்னாரைப் போல் இறைவனின்பால் பேரன்பு பெருக்கெடுத்து ஓடச் செய்வதற்காகவுமே அமைந்துள்ளன. இவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது நம் கடமையுமாகும்.

இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அத்துடன் இறைக்கட்டளையை எவ்விதத் தயக்கமும் இன்றி மகிழ்வோடும், இதயபூர்வமாகவும் நிறைவேற்றுபவர்களாகவும் இருந்தார்கள். உலக மாந்தர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையே ஒரு படிப்பினைதான். தனித்தவனாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் இறைவன் இப்ராஹிம் (அலை) அவர்களை, தன் நண்பர் என்று குர் ஆனில் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆன் (4:125) கூறுகிறது: மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.

இறைவனுக்கு உவப்பானதை செய்வதில் மகிழ்ச்சியும், ஆர்வமும் கொண்டிருந்த அவர்கள், இறைவன் தடுத்தவற்றைத் தானும் வெறுத்தார். இந்தக் காரணத்தினாலேயே தன் பெற்றோரை விட்டு விலகினார்.

இறைவன் அவர்களைப் பற்றி, திருக்குர்ஆனில் இப்ராஹிம் ஒரு வழிகாட்டி என்றும், அவரை தான் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் கூறுகிறான். இன்னும் அவருக்கு அழகானவற்றைக் கொடுத்ததாகவும், மறுமையில் நல்லவர்களின் ஒருவராக அவர் இருப்பார் என்றும் கூறுகிறான். (16:120122).

தள்ளாத வயதில் அவருக்கு அல்லாஹ் ஒரு ஆண் மகனைத் தன் அருட்கொடையாக வழங்குகிறான். ஒரு நாள் அல்லாஹ்வின் கட்டளை வருகிறது. கிஞ்சித்தும் தாமதிக்கவில்லை. மனைவி ஹாஜரா அம்மையார், பாலகன் இஸ்மாயில் (அலை) இருவருடனும் 1500 மைல்கள் பயணித்து சவுதி அரேபியாவின், மக்காவில் சுடும் பாலை நிலத்தை வந்தடைகிறார்கள். தன்னிடம் மீதமிருந்த உணவையும், நீர் இருந்த தோல் பையையும் மனைவியிடம் தந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கிறார்கள்.

எங்களை இந்த இடத்தில் விட்டுவிட்டு செல்கிறீர்களே, இது இறைக்கட்டளையா? என்று மனைவி கேட்க, ஆம் என்று பதிலிறுத்து விட்டு விரைகிறார்கள். உடனே மனைவி, அப்படியென்றால் இறைவனே எங்களுக்குப் போதுமானவன் என்று சொல்கிறார்கள்.

அவர்களை விட்டு விலகி சிறிது தொலைவில் மண்டியிட்டு இறைவனிடம் அவர் செய்யும் பிரார்த்தனை எப்படிப்பட்டது என்று பாருங்கள்.

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஅபா) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக! (திருக்குர்ஆன் 14:37).

அல்லாஹ், இப்ராஹிம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான் என்பதற்குச் சான்றாக பாலைவனமாக இருந்தாலும் மக்கா நகரம் செழிப்பானதாகவும், கனிவர்க்கங்கள் தடையின்றிக் கிடைக்கும் இடமாகவும் இன்று வரை திகழ்கிறது.

மனித சஞ்சாரமே அற்ற இடம், கொதிக்கும் பாலைவனம். அவ்விடத்தில் இறைவன் கட்டளையிட்டான் என்பதற்காக இறைவனின் பால் எல்லாப் பொறுப்பு களையும் சாட்டி துணைவியாரையும், பச்சிளம் பாலகனையும் விட்டு வருவதற்கு எப்படிப்பட்ட மனம் இருந்திருக்க வேண்டும். அன்னாரது மனைவியின் பொறுமையையும், பெருந்தன்மையையும் கூட வரலாறு தியாகமாகப் போற்றுகிறது.

ஒரு முறை இப்ராஹிம் (அலை) அவர்கள், தம் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டார்கள். இது இறைவனின் கட்டளை என்பதை உணர்ந்து மகனைப் பலியிடுவதற்குத் தயாராகிறார்கள். இறைக்கட்டளைக்கு மனைவியும் உடன்படுகிறார்கள். மகனிடம் கனவின் விவரத்தை சொல்கிறார்கள்.

இதுகுறித்து திருக்குர்ஆன் (37:102) இவ்வாறு குறிப்பிடுகிறது:

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக் கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! (மகன்) கூறினான்; என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.

ஒட்டு மொத்தக் குடும்பமே இறைவனின் கட்டளையை மகிழ்ச்சியுடன் சிரமேற்கொள்கிறது. ஒரு குடும்பத் தலைவன், தன் குடும்ப உறுப்பினர்கள் இறைவனின்பால் அன்பும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்களாக இருப்பதற்கு எப்படிப்பட்ட பயிற்சியைத் தந்திருக்க வேண்டும் என்பதை இங்கு நாம் உணர வேண்டும்.

பலியிடும் இடத்தை தந்தையும், தனயனும் அடைகின்றனர். வழியில் ஷைத்தான் ஆசை வார்த்தைகள் கூறி இப்ராஹிம் (அலை) அவர்களின் மனதை மாற்றப்பார்க்கிறான். அவர்கள் அவனை கல்லெறிந்து விரட்டுகிறார்கள். இவ்வாறு மூன்று முறை ஷைத்தான் பின் தொடர்ந்து அவர் மனதை மாற்ற முயல்கிறான். மூன்று முறையும் கல்லெறிந்து விரட்டுகிறார்கள். இந்நிகழ்வை நினைவுகூரும் விதமாக அதே இடத்தில் ஹஜ் செல்பவர்கள் கல் எறிந்து ஷைத்தானை விரட்டும் சடங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தந்தை மகனைப் படுக்க வைத்து கத்தியை ஓங்குகிறார். இந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது; நாம் அவரை யா இப்ராஹீம் என்றழைத்தோம்.

திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். (37:103105)

மகனுக்குப் பகரமாக ஒரு ஆட்டினை அறுத்துப் பலியிடச் சொல்லி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு இறைவன் கட்டளை இடுகிறான்.

இதுவே ஹஜ்ஜுப் பெருநாளன்று உலக முஸ்லிம்கள் ஒரு ஆட்டினையோ, ஒட்டகத்தையோ, அல்லது மாட்டினையோ அறுத்துப் பலியிடுவதற்கு காரணமாயிற்று. இப்பலியிடுதலுக்கு குர்பானி என்று பெயர். குர்பானி இறைச்சியை மக்கள் மூன்றாகப் பங்கிட வேண்டும். ஒரு பங்கினை தமக்கும், ஒரு பங்கினை உறவினர்களுக்கும், இன்னொரு பங்கினை ஏழைகளுக்கும் சமமாகப் பங்கிட வேண்டும்.

இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூருவதுடன், இறைவனின்பால் பேரன்பு, அவன் கட்டளைக்கு மாறு செய்யாதிருத்தல், இறையச்சம், இவற்றுடன் ஹஜ் செல்லக் கூடிய பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதும், இந்த ஈகைத் திருநாளில் நமது பிரார்த்தனையாக இருக்கட்டும், இன்ஷா அல்லாஹ்!

ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை84.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com