பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் சர்ச்சை; மவுனம் கலைத்த தேவேகவுடா


Deve Gowda about Prajwal Revanna
x

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக தேவேகவுடா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.வான எச்.டி.ரேவண்ணாவின் மகனும் ஆவார்.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கும் முன்பாகவே பிரஜ்வல் ரேவண்ணா தனது மக்கள் பிரதிநிதிக்கான 'டிப்ளோமேடிக்' பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். அவருக்கு எதிராக 'புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை சர்வதேச அளவில் 'இன்டர்போல்'(Interpol) போலீசார் தேடிவருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேவேகவுடா இன்று முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு சென்றுள்ளார். இந்த நாட்டின் சட்டப்படி அரசாங்கம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என எங்கள் குடும்பத்தின் சார்பில் குமாரசாமி(தேவேகவுடாவின் மற்றொரு மகன்) ஏற்கனவே கூறியுள்ளார்.

இந்த பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பலர் தொடர்புபடுத்தபட்டுள்ளனர். நான் யாரையும் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எச்.டி.ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது குறித்த உண்மைகள் மக்களுக்கு தெரியவந்துள்ளது. ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது, மற்றொரு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வர இருக்கிறது. அதுபற்றி நான் இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை."

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story