வெளிநாட்டிலேயே தலைமறைவாக இருக்க பிரஜ்வல் ரேவண்ணா திட்டம்?
ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 15-ந் தேதி வருவதற்காக முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார்.
பெங்களூரு,
ஹாசன் தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் அவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜெர்மனியிலும், பின்னர் துபாயிலும் பிரஜ்வல் ரேவண்ணா இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் வருகிற 15-ந் தேதி அவர் பெங்களூருவுக்கு வருவதாக கூறப்பட்டது.
அன்றைய தினம் ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு வருவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா முன்பதிவு செய்திருந்தார். இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவின் வருகையை எதிர்நோக்கி இருந்த போலீசார் அவரை கைது செய்ய தயாராகி வந்தனர். இந்தநிலையில், விமான டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 15-ந் தேதி வருவதற்காக முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார். இதனால் பிரஜ்வல் ரேவண்ணா தற்சமயம் பெங்களூருவுக்கு வரப்போவதில்லை என்றும், வெளிநாட்டிலேயே தலைமறைவாக இருக்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், இந்த சம்பவத்திற்கும் எச்.டி.ரேவண்ணாவுக்கும் தொடர்பு இல்லை என்றும் அந்த பெண் பேசியுள்ளார். இது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அந்த வீடியோவில் பெண் பேசி இருப்பது பிரஜ்வல் ரேவண்ணா மீது நீதிபதியிடம் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்பாக கூறியது என்று சொல்லப்படுகிறது.