தோனி விஷயத்தில் சி.எஸ்.கே.வின் அணுகுமுறை அனைத்து அணிகளுக்கும்...- கம்பீர்


தோனி விஷயத்தில் சி.எஸ்.கே.வின் அணுகுமுறை அனைத்து அணிகளுக்கும்...- கம்பீர்
x

image courtesy: AFP 

எம்.எஸ். தோனிக்கு கடந்த சில வருடங்களாகவே கடைசி சில ஓவர்களில் மட்டும் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்வதற்கான சுதந்திரத்தை சி.எஸ்.கே. நிர்வாகம் கொடுத்துள்ளதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 2 முறை சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

நடப்பு சீசனில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக அந்த அணிக்கு 2 முறை கேப்டனாக கோப்பையை வென்றுக்கொடுத்த கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் 42 வயதாகும் எம்.எஸ். தோனிக்கு கடந்த சில வருடங்களாகவே கடைசி சில ஓவர்களில் மட்டும் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்வதற்கான சுதந்திரத்தை சி.எஸ்.கே. நிர்வாகம் கொடுத்துள்ளதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு அணியிலும் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் அனைத்து வீரர்களுக்கும் முழுமையான சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அணுகுமுறை ஐ.பி.எல். முதல் அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் வெற்றிகரமாக செயல்படுவதற்கு பொருந்தும் என்று கம்பீர் கூறியுள்ளார். அத்துடன் ஒரு அணியில் சுதந்திரமின்மையை உணரும்போதுதான் வீரர்கள் சொதப்புவார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இது சி.எஸ்.கே. அணியின் திட்டமாகும். அவர்கள் தோனிக்கு சுதந்திரம் கொடுத்துள்ளனர். இங்கே பல்வேறு அணிகள் வெவ்வேறு திட்டத்தை கொண்டுள்ளன. சி.எஸ்.கே. இந்த திட்டத்தை கடந்த 2 - 3 வருடங்களாக கடைப்பிடித்து வருகிறது. அந்த சுதந்திரம் தோனி தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அனுமதியை கொடுக்கிறது. நீங்கள் 20 - 25 பந்துகளை எதிர்கொள்ளும்போது கொஞ்சம் பொறுப்புடன் வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள்.

ஆனால் வெறும் 8 - 10 பந்துகளை மட்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தால் நீங்கள் சுதந்திரத்துடன் செயல்படுவீர்கள். சி.எஸ்.கே.வின் இந்த அணுகுமுறை ஐ.பி.எல். முதல் உள்ளூர் வரை அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் வெற்றிகரமாக செயல்படுவதற்கு பொருந்தும். சுதந்திரமின்மையும் பாதுகாப்புமின்மையும்தான் ஒரு வீரரின் தோல்விக்கு காரணமாக நான் பார்க்கிறேன். அதனால் உங்களுடைய அணியில் வீரர்களுக்கு பாதுகாப்பு இருப்பது முக்கியம். அப்படி இருக்கும் அணியே கடைசியில் வெற்றி பெறுகிறது" என்று கூறினார்.


Next Story