'தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி' - ராமதாஸ் அறிக்கை


தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி - ராமதாஸ் அறிக்கை
x

மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாட்டில் 18 ஆம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் கடும் வெயிலையும் கடந்து ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றி சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் சராசரியாக 70 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவின் அளவு, வாக்காளர்களின் உடல் மொழி, பொதுவான மக்களின் மனநிலை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை மாற்ற வேண்டும், மத்தியில் மோடியின் ஆட்சி தொடர வேண்டும் எண்ணத்தில் பெருமளவிலான மக்கள் பா.ம.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக உணர முடிகிறது.

தமிழ்நாட்டில் மக்களவை பிரதிநிதித்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்காக மிகச் சிறந்த முறையில் களப்பணியாற்றிய அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும், ஆதரவு தந்த அமைப்புகளுக்கும் பா.ம.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story