எல்லையை பார்வையிட சென்ற போது குண்டுவீச்சு தாக்குதல் - தப்பியோடிய உள்துறை மந்திரி: பரபரப்பு வீடியோ


எல்லையை பார்வையிட சென்ற போது குண்டுவீச்சு தாக்குதல் - தப்பியோடிய உள்துறை மந்திரி: பரபரப்பு வீடியோ
x
தினத்தந்தி 21 Feb 2022 10:10 AM GMT (Updated: 21 Feb 2022 10:10 AM GMT)

எல்லையை பார்வையிட சென்ற உள்துறை மந்திரியை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

கிவ்,

உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. 

உக்ரைன் எல்லையில் கடந்த நவம்பர் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. 

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் தெரிவித்தன. மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் ஆயுதங்களை அனுப்பி வைத்தன. அதேவேளை, பல்வேறு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின் கிரிமியாவில் நடைபெற்று வந்த போர் பயிற்சி நிறைவு பெறுவதாகவும், படைகள் முகாம் திரும்புகின்றன என்றும் ரஷியா அறிவித்தது. ஆனாலும், ரஷியா - உக்ரைன் எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில், உக்ரைனின் டுனெட்ஸ் என்ற மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. டுனெட்ஸ் மக்கள் குடியரசு என்ற பெயருடைய இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தின் பகுதியில் ஆட்சி செய்து வருகிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பு உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், போர் பதற்றம் அதிகரித்து வரும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு மிக அருகே உள்ள எல்லைப்பகுதியை உக்ரைன் உள்துறை மந்திரி டெனிஸ் மொனஸ்டிஸ்கை, ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து உள்துறை மந்திரி டெனிஸ், உக்ரைன் ராணுவத்தினர், பத்திரிக்கையாளர்களை குறிவைத்து குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த உள்துறை மந்திரி, பத்திரிக்கையாளர்கள், ராணுவத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள எல்லையில் இருந்து சிதறியடித்து ஒடினர். கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் உக்ரைன் மந்திரி, ராணுவத்தினரை விரட்டியடித்தனர்.

கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதையும், உள்துறை மந்திரி, ராணுவத்தினர் சிதறியடித்து ஓடுவதையும் பத்திரிக்கையாளர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது சுமார் 300 மீட்டர் இடைவெளியில் ஒரு குண்டு விழுந்தது.



அதன்பின்னர், உள்துறை மந்திரி டெனிஸ் மொனஸ்டிஸ்கை மற்றும் ராணுவ அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனத்தில் ஏறி அந்த இடத்தைவிட்டு உடனடியாக வெளியேறினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story