ரஷியாவுடன் சண்டையிட 66 ஆயிரம் உக்ரைனியர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர் - பாதுகாப்புத்துறை மந்திரி தகவல்


ரஷியாவுடன் சண்டையிட 66 ஆயிரம் உக்ரைனியர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர் - பாதுகாப்புத்துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 5 March 2022 10:07 AM GMT (Updated: 5 March 2022 10:25 AM GMT)

ரஷியாவுடன் சண்டையிட 66 ஆயிரம் உக்ரைனிய ஆண்கள் சொந்த நாடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த போரில் இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், மீட்பு பணிகளுக்காக உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா இன்று அறிவித்துள்ளது. உக்ரைனுடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட படி வோல்னோவாகா, மரியுபோல் ஆகிய 2 நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷியா இன்று தெரிவித்துள்ளது. இரு நகரங்களில் இருந்தும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற இந்த நடவடிக்கையை ரஷியா எடுத்துள்ளது. 

அதேவேளை, ரஷியாவுக்கு எதிரான போரில் சண்டையிட வெளிநாடுகளில் இருந்து யார் வேண்டுமானாலும் தங்கள் படையில் இணையலாம் என உக்ரைன் அரசு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட உக்ரைன் ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், வெளிநாடுகளில் உள்ள உக்ரைனியர்களும் ரஷியாவுக்கு எதிரான போரில் சண்டையிட நாட்டிற்கு வரலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரஷியாவுடன் சண்டையிட வெளிநாடுகளில் தங்கி இருந்த 66 ஆயிரத்து 224 உக்ரைனிய ஆண்கள் சொந்த நாடு திரும்பியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி ஒலிக்ஸ்சி ரிஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.

Next Story