சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு


சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 23 March 2022 10:17 AM GMT (Updated: 23 March 2022 10:17 AM GMT)

சீனாவில் கடந்த 21-ந்தேதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பீஜிங்,

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737-800 ரக விமானம் கடந்த 21-ந்தேதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த யாரும் இதன் பிறகு உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமானத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால், விபத்துக்கான காரணத்தை கண்டறிவது கடினமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தால் மட்டுமே விபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய முடியும் என்பதால், அதனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் விமானத்தில் இருந்த இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் விமானிகளின் உரையாடல்கள், விமானத்தின் பதிவுகள் ஆகியவை மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய முடியும். எனவே, இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story