பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை - இம்ரான்கான் திட்டவட்டம்


Image Courtesy: dawn
x
Image Courtesy: dawn
தினத்தந்தி 31 March 2022 4:26 PM GMT (Updated: 31 March 2022 4:26 PM GMT)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும்.

இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி கூட்டணியின் பலம் 179-ல் இருந்து 164 ஆக குறைந்தது. மேலும், எம்கியூஎம் கட்சி எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்தது. இதனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்தது.

பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது, இம்ரான்கானின் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை எம்கியூஎம் விலக்கிக்கொண்டதால் இம்ரான்கான் அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நான் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதில்லை. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நான் சந்திப்பேன்.

பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்படவேண்டும் அல்லது பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று வெளிநாட்டு சக்திகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன. எனது 20 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை பார்த்தவர்களுக்கு தெரியும் நான் கடைசி பந்துவரை ஆடுவேன். எனது வாழ்க்கையில் நான் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் வீட்டில் இருப்பேன் என யாரும் நினைக்க வேண்டாம். முடிவு என்னவாக இருந்தாலும் நான் வலிமையுடன் வருவேன்’ என்றார்.    

Next Story