இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் நிறைவு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தை நெருங்கியுள்ளார்.;
image courtesy:PTI
துபாய்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த தொடர் நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். தென் ஆப்பிரிக்க தொடரில் அசத்திய விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கும் முதலிடத்தில் உள்ள ரோகித்துக்கும் வெறும் 8 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக டேரில் மிட்செல் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்திற்கும், இப்ராஹிம் சத்ரன் ஒரு இடம் சரிந்து 4-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியா தரப்பில் சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 10-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் மாற்றமின்றி முதலிடத்திலும் ஆர்ச்சர் 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்தியாவின் குல்தீப் யாதவ் கிடுகிடுவென 3 இடங்கள் எகிறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா தரப்பில் இவர் மட்டுமே டாப்-10 இடத்திற்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மாற்றமில்லை. அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய தரப்பில் அக்சர் படேல் 10-வது இடத்தில் உள்ளார்.