மீண்டும் கட்டுக்கடங்காமல் புதிய உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. என்ன காரணம்..?

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்தை நெருங்கி இருந்தது.
மீண்டும் கட்டுக்கடங்காமல் புதிய உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. என்ன காரணம்..?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டியதும், என்னது 50 ஆயிரம் ரூபாயை தங்கம் தொட்டுவிட்டதா?' என திகைக்கும் அளவுக்கு விலை உயர்ந்து இருந்தது. அதன்பிறகு விலை கொஞ்சம்கூட குறையவில்லை. அவ்வாறு விலை உயர்ந்து வந்து, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது.

கடந்த ஆண்டில் இருந்த உயர்வை காட்டிலும், நடப்பாண்டில் தங்கம் விலை, ராக்கெட், ஜெட் என இன்னும் நொடிப்பொழுதில் வேகம் எடுக்கக்கூடிய எதனுடனும் ஒப்பிடும் அளவுக்கு இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. அந்தநேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் அதன் விலையில் இடையில் சற்று சரிவு ஏற்பட்டது. அவ்வாறு விலை குறைந்து வந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கு கடந்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி விற்பனை ஆனது. இப்படியே விலை குறைந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்த நேரத்தில், மீண்டும் விலை ஏறத்தொடங்கியது.

அதிலும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. தொடர்ச்சியாக ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனை ஆனது.

வரலாறு காணாத புதிய உச்சம்

இந்தநிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம், பிற்பகல் நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.320-ம், சவரனுக்கு ரூ.2,560-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதே நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏன், ஓரிரு நாட்களிலேயே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

காரணம் என்ன?

தங்கம் விலை அதிரடி உயர்வுக்கு, அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொதுவாக வட்டி விகிதம் குறைப்பதால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை குறைத்து, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை அதிகம் திருப்புவார்கள். அப்படியாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால் அதன் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி விலையும் தொடர்ந்து உச்சம்

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து உச்சம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.209-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனையாகி இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.216-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6-ம், கிலோவுக்கு ரூ.6 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.210-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

13.12.2025- ஒரு சவரன் ரூ.98,960

12.12.2025- ஒரு சவரன் ரூ.98,960

11.12.2025- ஒரு சவரன் ரூ.96,400

10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240

09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000

08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320   

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com