

பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபல நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். இந்த படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூல் குவிக்கின்றன.
தற்போது, ராதே ஷியாம் திரைக்கு வந்துள்ளது. சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. ஆதிபுருஷ் படம் ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகிறது. இதில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் வருகிறார். இந்நிலையில், பிரபாஸ் திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பாகுபலி படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தங்களுக்குள் காதல் இல்லை என்று மறுத்தனர்.
இந்நிலையில், பிரபாஸ் தற்போது அளித்துள்ள பேட்டியில் எனக்கு திருமணம் நிச்சயம் நடக்கும். ஆனால், அது காதல் திருமணமாகவே இருக்கும். திருமணம் எப்போது நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது என்றார்.