பல விதங்களில் பயன்படும் ‘டீ ட்ரீ எண்ணெய்’

முடி உதிர்வு, அடர்த்தி குறைவது, பொடுகு, அரிப்பு போன்ற தலைமுடி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை ‘டீ ட்ரீ எண்ணெய்’க்கு உண்டு.
பல விதங்களில் பயன்படும் ‘டீ ட்ரீ எண்ணெய்’
Published on

சுற்றுச்சூழல் மாசுகளால், இளம் வயதிலேயே கேசம் முதல் சருமம் வரை அனைத்து உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிறது. இவற்றைத் தடுத்து, பெண்களின் அழகை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது டீ ட்ரீ எண்ணெய்.

ஷாம்பூ முதல் பேஸ் வாஷ், கிரீம் வரை அனைத்து வகையான அழகு சாதனப் பொருட்களிலும், இந்த எண்ணெய்யை கலந்து தயாரிக்கிறார்கள்.

டீ ட்ரீ எண்ணெய் தேயிலைச் செடியில் இருந்து தயாரிக்கப்படுவதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், இது மெலலூகா ஆல்டர்னி போலியா என்ற மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்த மரங்கள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. அங்குள்ள பழங்குடியின மக்கள் மருத்துவப் பயன்பாட்டுக்காக இந்த மரத்தின் இலைகளில் இருந்து டீ ட்ரீ எண்ணெய் தயாரிக்கின்றனர்.

டீ ட்ரீ எண்ணெய்யில் உள்ள டெர்பினின் 4 ஓ.எல். என்ற மூலக்கூறு, பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் தன்மை கொண்டது. ரத்த வெள்ளை அணுக்களின் செயலை மேம்படுத்த உதவுகிறது. சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இது இயற்கை சானிடைசராக பயன்படுவதுடன், காயங்களையும் குணப்படுத்துகிறது.

டீ ட்ரீ எண்ணெய்யை நேரடியாகப் பயன்படுத்தாமல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால் பலன் அதிகம் கிடைக்கும். இதன் மற்ற பயன்களைப் பார்ப்போம்..

கேசத்தின் நண்பன்:

முடி உதிர்வு, அடர்த்தி குறைவது, பொடுகு, அரிப்பு போன்ற தலைமுடி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை டீ ட்ரீ எண்ணெய்க்கு உண்டு. 3 டீஸ்பூன் டீ ட்ரீ எண்ணெய்யுடன், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவி, அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு மிருதுவான ஷாம்பூ கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் 3 முறை இவ்வாறு செய்துவந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

சருமத்தைப் பாதுகாக்கும்:

டீ ட்ரீ எண்ணெய்யில் உள்ள ஜிங்க் ஆக்சைடு சருமத்தில் ஏற்படும் அரிப்பை நீக்குகிறது. ஈரப்பதத்தைத் தக்க வைத்து, சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, வயது முதிர்வதன் காரணமாக, சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் காக்கிறது. சிறிதளவு தண்ணீருடன் 3 சொட்டு டீ ட்ரீ எண்ணெய் கலந்து தினமும் முகத்தில் தடவி வந்தால் சுருக்கம், பருக்கள், கரும்புள்ளி, வடு, தழும்பு, மரு ஆகியவை நீங்கும்.

நகத்தை அழகாக்கும்:

சிலருக்கு நகங்கள் வலுவில்லாமல் இருப்பதால், எளிதில் உடைந்துவிடும். மேலும், நகத்தில் பூஞ்சை தாக்கும்போது அதன் நிறம், வளர்ச்சி அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். டீ ட்ரீ எண்ணெய்யை நகத்தின் மீது தடவி வரும்போது, பூஞ்சைத்தொற்று நீங்கும். இந்த எண்ணெய்யை கால் பாதம், கைகளில் தடவி மசாஜ் செய்யும்போது, மிருதுவாகவும், அழகாகவும் மாறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com