வெளிநாட்டில் அசத்தி வரும் தமிழ் பெண்

மாடலாக இருக்க வேண்டும் என்றால், சரும ஆரோக்கியம் முக்கியமானது. சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே தினமும் வைட்டமின் டி கிடைப்பதற்காக சூரிய குளியல் எடுப்பேன்.
வெளிநாட்டில் அசத்தி வரும் தமிழ் பெண்
Published on

னடாவில் வசிக்கும் தமிழ் பெண் சந்தியா ஞானமேகன். மாடலிங், திரைப்படம் ஆகியவற்றின் மூலம் அங்கு பிரபலமாக இருக்கிறார்.

சந்தியா 3 வயதாக இருந்தபோது இவரது பெற்றோர் இலங்கையில் இருந்து கனடாவில் குடியேறினார்கள். அப்போதிலிருந்து சந்தியா கனடாவில் வசித்து வருகிறார்.

இனி அவரே தொடர்கிறார்…

நான் படித்தது பி.ஏ. பொருளாதாரம். தமிழ் தவிர ஆங்கிலம், பிரெஞ்சு, கனடியன் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டேன். கல்லூரியில் படிக்கும்போது வேறு ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று கருதினேன். சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இருந்தது.

கேமராவின் முன்பு நின்று நடிக்க வேண்டும் என்றால், அதற்கு அனுபவம் தேவை. எனவே மாடலிங் துறை மீது கவனம் செலுத்தினேன். எனது 17-வது வயதில் மாடலிங் துறைக்கு வந்தேன். முதன் முதலில் போட்டோ ஷூட் எடுத்தபோது கூச்சமாக இருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக் கொண்டேன்.

ஆடை, அழகு சார்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன்.

நான் நடிக்கப்போகும் விளம்பரம் மக்களுக்குப் பயனுள்ளதா? ஏதேனும் எதிர் விளைவுகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து ஆய்வு செய்தபின்பு தான் அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வேன்.

பணத்திற்காக மட்டுமே மாடலிங் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

மாடலாக இருக்க வேண்டும் என்றால், சரும ஆரோக்கியம் முக்கியமானது. சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே தினமும் வைட்டமின் டி கிடைப்பதற்காக சூரிய குளியல் எடுப்பேன். ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும், மெல்லோட்டப் பயிற்சியும் மேற்கொள்வேன். பின்பு ஜிம்மில் ஒரு மணி நேரம் எடைப் பயிற்சிகளை செய்கிறேன்.

காய்கறிகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட கனிகளை அதிகம் சாப்பிடுவேன். முடிந்த வரை வீட்டிலேயே உணவு தயாரித்து சாப்பிடுவேன். வெளியில் விற்கும் உணவுகளைப் பெரும்பாலும் தவிர்ப்பது என்னுடைய வழக்கம். தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் சரும பராமரிப்பு முறைகளை செய்த பின்பே, தூங்குவதற்குச் செல்வேன்.

தமிழக மக்களோடு நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். தற்போது மூன்று தமிழ்ப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com