ஆபாச படங்களை காட்டி விசாரித்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு: கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை

நித்யானந்தா ஆசிரம சிறுமிகளிடம் ஆபாச படங்களை காட்டி விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் மீது, கோர்ட்டு உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Published on

ஆமதாபாத்,

நித்யானந்தா சாமியாருக்கு பெங்களூரு அருகேயுள்ள பிடதியிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் ஆசிரமம் உள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூர் கிராமத்தில் உள்ள நித்யானந்தா சாமியாரின் ஆசிரமத்தில் தனது இரு மகள்கள் மற்றும் ஒரு மகனை சட்ட விரோதமாக தங்க வைத்து இருப்பதாகவும், அவர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் கடந்த நவம்பர் மாதம் ஆமதாபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் விவேகானந்தா நகர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. சர்வதேச போலீசாரின் உதவியுடன் அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே ஹிராபூர் ஆசிரமத்தில் போலீசார் நடத்திய விசாரணை தொடர்பாக அந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவரும், நித்யானந்தாவின் சீடருமான கிரிஷ் துர்லாபதி ஆமதாபாத்தில் உள்ள தனிக்கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஆசிரமத்துக்கு விசாரணை நடத்த வந்த விவேகானந்தா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.பி.ராணா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல குழுவைச் சேர்ந்தவர்கள் ஆசிரமத்தில் உள்ள சிறுமிகளிடம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை காண்பித்து விசாரணை மேற்கொண்டதாகவும், தங்களுக்கு சாதகமான பதிலை சிறுமிகளிடம் இருந்து பெற அவர்களை மிரட்டி, மனரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.பி.ராணா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கே.டி.கமாரியா, ரியாஸ் சர்வையா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திலீப் மெர், குழந்தைகள் நல குழுவின் தலைவர் பவேஷ் படேல் மற்றும் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 14 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விவேகானந்தா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பதாக ஆமதாபாத் ரூரல் (கிராமப்புறம்) துணை போலீஸ் சூப்பிரண்டு பி.டி.மன்வார் நேற்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com