20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு: கூட்டணிக்கும், போராட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை; வேலூரில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேட்டி

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு நடத்தப்படும் போராட்டத்துக்கும், கூட்டணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி பேசியபோது எடுத்த படம்
பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி பேசியபோது எடுத்த படம்
Published on

பொதுக்குழு கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு குறித்த பொதுக்குழு கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில துணை பொது செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் செயலாளர் பி.கே.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் சுரேஷ், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ஜி.குமார், மாநகர செயலாளர் சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார்.

30-ந் ததி ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில், வன்னியர்களுக்கு தனியாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்று வரும் போராட்டம் வெற்றி பெறவும், டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி வருகிற 30-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வேலூர் மாவட்டத்தில் வன்னியர்களை திரட்டி மாபெரும் அறப்போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு பின்னர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வுக்கு கண்டனம்

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு வருகிற 30-ந் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும். எங்களது தொடர் போராட்டத்துக்கு மாற்று கட்சியில் உள்ள வன்னியர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். எல்லா சமுதாய மக்களும் எங்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதை அறிந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். எங்களது இந்த போராட்டம் உரிமைக்கானது. இதனால் கட்சி கூட்டணிக்கும், போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தேர்தல் வருவதால் காலதாமதப்படுத்தக் கூடாது. புயல் சேதத்துக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எங்கள் போராட்டத்தை தி.மு.க. கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

வேலைவாய்ப்பில் முன்னுரிமை

மத்திய அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம், மகளிர் அணி தலைவி வரலட்சுமி, மாநில துணை தலைவர் சி.கே.ரமேஷ்நாயுடு, மாநில வன்னியர் சங்க செயலாளர் எம்.கே.முரளி, மாவட்ட துணை செயலாளர்கள் நா.சசிக்குமார், இளங்கோவன், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் அன்பரசு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் முரளி, ஜலகண்டன், அமைப்பு செயலாளர் அக்னிவேல்முருகன், பள்ளிகொண்டா நகர செயலாளர் சையத்அன்வர், நகர இளைஞர் அணி துணை செயலாளர் குமரவேலு, கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com