சென்னை வால்டாக்ஸ் சாலையில் பார்சல் நிறுவனத்தில் 25 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் அதிரடி

சென்னை வால்டாக்ஸ் சாலையில் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்த 25 கிலோ போதைப்பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் பார்சல் நிறுவனத்தில் 25 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் அதிரடி
Published on

பெரம்பூர்,

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து வெளியூருக்கு விலை உயர்ந்த போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரி பார்த்திபன் தலைமையிலான அதிகாரிகள் அந்த பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்குள் அதிரடியாக புகுந்து அங்கிருந்த பார்சல்களை சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பார்சல் ஒன்றை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் இருந்த கழிவறை கோப்பையில் உள்ள பார்சலில் 25 கிலோ விலை உயர்ந்த போதைப்பொருள்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அந்த பார்சலை வெளியூருக்கு அனுப்ப முயன்ற நபர் யார்? என்பது குறித்து பார்சல் சர்வீஸ் நிறுவன ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பார்சல் சர்வீஸ் நிறுவனம் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போதைப்பொருட்களை கொண்ட பார்சலை கொண்டு வந்தவரின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். போதைப்பொருளின் தன்மை, பெயர் விவரம் அறிவதற்காக அவற்றை ஆய்வகத்துக்கு அனுப்ப உள்ளனர்.

என்ன வகையான போதைப்பொருள்? அதன் சந்தை மதிப்பு? கடத்தலில் ஈடுபட முயன்ற நபர் குறித்த விவரங்கள், அந்த பார்சலில் வேறு ஏதேனும் பொருட்கள் (தங்க கட்டிகள்) இருந்ததா? உள்ளிட்ட தகவல்கள் விசாரணையில் வெளிவரும் என மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com