திருப்பூரில் இருந்து உத்தரபிரதேசம், ஒடிசாவுக்கு இயக்கப்பட்ட 2 சிறப்பு ரெயில்களில் 2,928 தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு

திருப்பூரில் இருந்து ஒடிசா, உத்தரபிரதேசத்துக்கு இயக்கப்பட்ட 2 சிறப்பு ரெயில்களில் 2,928 தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
திருப்பூரில் இருந்து உத்தரபிரதேசம், ஒடிசாவுக்கு இயக்கப்பட்ட 2 சிறப்பு ரெயில்களில் 2,928 தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன. இதில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால், வேலை தேடி வருபவர்களை உடனே வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள்.

தற்போது திருப்பூரில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 6 லட்சம் பேர். வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் 2 லட்சம் பேர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பிறப்பித்துள்ள ஊரங்கு உத்தரவு காரணமாக ஏற்கனவே தமிழக தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அந்த நேரத்தில் ரெயில் வசதி இல்லாததால் ஊருக்கு செல்ல முடியாமல் திருப்பூரிலேயே தங்கி இருந்தனர். இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறையினரிடம் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது செல்போன் எண், ஆதார் எண் போன்றவற்றை கொடுத்து முன்பதிவு செய்தனர்.

அதன்படி திருப்பூரில் இருந்து பீகாருக்கு 2 சிறப்பு ரெயில்கள் மூலம் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் அந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக சென்றனர். இதற்கிடையே 3-வது சிறப்பு ரெயில் நேற்று திருப்பூரில் இருந்து ஒடிசா மாநிலம் பலாசூர் வரை இயக்கப்பட்டது.

இந்த ரெயில் நேற்று காலை 10 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்பட்டது. முன்னதாக இந்த தொழிலாளர்கள் அனைவரும் காலையில் இருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். இந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் களும் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்டு 1,464 தொழிலாளர்கள் உற்சாகமாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். முன்னதாக அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதுபோல் திருப்பூரில் தங்கி பல்வேறு பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கக்கோரி ஏற்கனவே இணைய தளம் மூலம் விண்ணப்பித்து இருந்தனர். ஏற்கனவே சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்களில் 1,464 பேர் நேற்று இரவு மற்றொரு சிறப்பு ரெயில் மூலம் திருப்பூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் மருத்துவக்குழுவினரால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் உற்சாகமாக ரெயிலில் பயணம் செய்தனர். அந்தவகையில் நேற்று மட்டும் 2 சிறப்பு ரெயில்கள் மூலம் 2 ஆயிரத்து 928 பேர் ஒடிசா, உத்தரபிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com