பழைய மாமல்லபுரம் சாலையில் 4 சுங்கச்சாவடிகள் இன்று முதல் மூடல்

சென்னை மத்திய கைலாசில் இருந்து சிறுச்சேரி வரை உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த 12 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகரிப்பால் சாலைகள் மேம்படுத்தப்பட்டன.
பழைய மாமல்லபுரம் சாலையில் 4 சுங்கச்சாவடிகள் இன்று முதல் மூடல்
Published on

அப்போது சென்னை புறநகர் பகுதிகள் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளாக இருந்ததால் பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம் சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் சாலை ஆகிய 4 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேற்கண்ட பகுதிகள் சமீப காலத்தில் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள இத்தகைய சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை எழுந்தது. சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பழைய மாமல்லபுரம் சாலையில் மெட்ரோ பணிகள் நடக்க இருப்பதால் இன்று (திங்கட்கிழமை) முதல் பெருங்குடி, பள்ளிக்கரணை-துரைப்பாக்கம், மேடவாக்கம் சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் சாலை ஆகிய 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு அப்பகுதி வாகன ஒட்டிகள் வரவேற்பு தெரிவித்தனர். பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள 4 இடங்களில் சுங்கச்சாவடி மூடப்படுவதையொட்டி பெருங்குடி சுங்க சாவடி அருகே தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அரவிந்த்ரமேஷ் ஆகியோர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகள் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com