புழல் அருகே கலப்பட பெட்ரோல், டீசல் குடோன் கண்டுபிடிப்பு 8 பேர் கைது

புழல் அருகே கலப்பட பெட்ரோல், டீசல் குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 8 பேரை கைது செய்த போலீசார், 14 டேங்கர் லாரிகள் உள்பட 18 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
புழல் அருகே கலப்பட பெட்ரோல், டீசல் குடோன் கண்டுபிடிப்பு 8 பேர் கைது
Published on

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் அம்பத்தூர் சாலை அருகே கலப்பட பெட்ரோல், டீசல் குடோன் செயல்பட்டு வருவதாக மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புழல் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் வசந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சோதனை செய்தனர்.

அப்போது மணலியில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு வினியோகம் செய்ய பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளை இங்கு கொண்டுவந்து அதில் இருந்து ஆயிரம் லிட்டர், 1500 லிட்டர் வீதம் திருடி இங்கு இறக்கி வைக்கப்படும்.

பின்னர் அந்த பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் கலப்படம் செய்து கள்ளத்தனமாக பெட்ரோல் பங்குகளுக்கு வினியோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

8 பேர் கைது

இது தொடர்பாக புழல் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(வயது 41), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அலெக்ஸ்(47), செங்கல்பட்டை சேர்ந்த பார்த்திபன்(26), அம்பத்தூரை சேர்ந்த மணி(35), கொடுங்கையூரைச்சேர்ந்த மகேஷ்(38), கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளங்கோவன்(27), புழல் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(42), சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்(48) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியான தி.மு.க. பிரமுகர் வரதன் தலைமறைவாகிவிட்டார். இது சம்பந்தமாக 14 டேங்கர் லாரிகள், ஒரு கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த குடோன் பல ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com