குடமுழுக்கு முடிந்த 2-வது நாள் தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்

குடமுழுக்கு முடிந்த 2-வது நாளான நேற்று தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
குடமுழுக்கு முடிந்த 2-வது நாள் தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் 1010-ம் ஆண்டு கட்டினார். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் 1997-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தது.

23 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடந்தது. இதையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் யாகசாலை பூஜையும் நடந்தது. குடமுழுக்கு விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அதன்படி பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி குடமுழுக்கை கண்டுகளித்ததோடு, சாமி தரிசனமும் செய்தனர்.

நீண்ட வரிசையில் தரிசனம்

குடமுழுக்கு முடிந்த 2-வது நாளான நேற்று பெரியகோவிலில் காலை நேரத்தில் வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. காலை 10 மணிக்குப்பிறகு பெரிய கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்கனவே குடமுழுக்கு அன்று பக்தர்கள் இரும்பு தடுப்புக்கம்பி வழியாக அனுமதிக்கப்பட்டனர். நேற்றும் பக்தர்கள் அந்த வழியாகவே சென்று தரிசனம் செய்தனர். போலீஸ் பாதுகாப்பும் கூடுதலாக போடப்பட்டு இருந்தது.

சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அங்கும் போலீசார் இரும்பு தடுப்புக்கம்பிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். யாகசாலை பூஜை நடந்த 1-ந் தேதி முதலே தஞ்சை மாநகரில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக 4, மற்றும் 5-ந் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வாகனங்களும் திருப்பி விடப்பட்டன. முக்கிய வீதிகளில் இருசக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் குட முழுக்கு முடிவடைந்ததையடுத்து தஞ்சை மாநகரில் போக்குவரத்து நேற்று சகஜ நிலைக்கு திரும்பியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com