

சேலம்,
திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே உள்ள பொன் முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். கட்டிடப்பணிகள் மேற்பார்வையாளர். இவருடைய மனைவி லீலாவதி. இவர்களது மகன் நதீஷ் சத்யா (வயது 3).
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர் கொளஞ்சி. இவருடைய மகன் சுரேஷ் (27). இவர் கடந்த சில மாதங்களாக முருகானந்தத்திடம் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
காத்திருந்தனர்
இந்த நிலையில் சம்பள பாக்கி தராத கோபத்தால் தனது மகனை, சுரேஷ் கடத்தி சென்றுவிட்டதாக திருப்பூர் மாவட்டம் நல்லூர் போலீசில் முருகானந்தம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது குழந்தையை சுரேஷ் கடத்திக்கொண்டு சேலம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் நேற்று இரவு சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நல்லூர் போலீசார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் பள்ளப்பட்டி போலீசார், சேலம் பஸ்நிலையத்தில் காத்திருந்தனர்.
மடக்கி பிடித்தனர்
அப்போது சுரேஷ் குழந்தையுடன் பஸ்சில் இருந்து இறங்கியபோது அவரை மடக்கிப்பிடித்து குழந்தையை மீட்டனர். பின்னர் சுரேசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது சுரேஷின் மனைவியை அவரிடமிருந்து பிரித்து முருகானந்தம் வேறு ஒரு இடத்தில் தனிக்குடித்தனம் வைத்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் முருகானந்தத்தின் மகனை கடத்தினால் தனது மனைவியை தன்னிடம் ஒப்படைத்து விடுவார் என்ற எண்ணத்தில் குழந்தையை கடத்தி உள்ளார் என்றும் தெரிவித்தனர்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து குழந்தை நதீஷ் சத்யாவை அவனது தந்தை முருகானந்தத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.
குழந்தையை கடத்தி வந்த சுரேஷ் நல்லூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து சுரேசை நல்லூர் போலீசார் அழைத்துச் சென்றனர். குழந்தை கடத்தி வரப்பட்ட சம்பவத்தால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.