நாசிக் அருகே பயங்கர விபத்து: மோதிய வேகத்தில் பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்தன 20 பயணிகள் பரிதாப சாவு - 15 பேர் படுகாயத்துடன் மீட்பு

நாசிக் அருகே ஏற்பட்ட கோர விபத்தில் மோதிய வேகத்தில் அரசு பஸ்சும், ஆட்டோவும் சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்தன. இதில் 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
நாசிக் அருகே பயங்கர விபத்து: மோதிய வேகத்தில் பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்தன 20 பயணிகள் பரிதாப சாவு - 15 பேர் படுகாயத்துடன் மீட்பு
Published on

மும்பை,

துலே மாவட்டத்தில் இருந்து நேற்று நாசிக் மாவட்டம் கல்வான் நோக்கி மாநில போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது.

அந்த பஸ் மாலை 4 மணி அளவில் நாசிக் மாவட்டம் மெஸ்தி பாடாவில் உள்ள மாலேகாவ்-தியோலா சாலையில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோவுடன் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் பஸ், ஆட்டோவை இழுத்துகொண்டு சென்றது. பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் மரண ஓலம் எழுப்பினர்.

இந்த நிலையில் சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் பஸ்சும், ஆட்டோவும் சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தன. கிணற்றின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு இரு வாகனங்களும் உள்ளே விழுந்தன. ஆட்டோ அடியில் சிக்கி கொள்ள அதற்கு மேல் பஸ் தலைகீழாக விழுந்து கிடந்தது. பஸ்சின் பின்புறம் தண்ணீரில் மூழ்காமல் வெளியில் தெரிந்தது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பயணிகள் உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து குறித்து அந்த சாலையில் வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களும் அங்கு குவிந்தனர்.

கிணற்றுக்குள் பஸ் செங்குத்தாக விழுந்து கிடந்ததால் பயணிகளை மீட்பதில், மீட்பு படையினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. பஸ்சின் பின்புற கண்ணாடியை உடைத்து உள்ளே சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இரவு வளையில்பஸ் கிணற்றில் இருந்து வெளியே தூக்கப்பட்டது. இந்த விபத்தில் பஸ் மற்றும் ஆட்டோவில் இருந்த 20 பயணிகள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோர சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய பஸ் ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும் பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்த அரசு அறிவித் துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com