ஐஸ் கம்பெனியில் அமோனியம் வாயு கசிவு; பெண் மயக்கம் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்

குளச்சல் அருகே ஐஸ் கம்பெனியில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பெண் மயக்கம் அடைந்தார். தொழிலாளர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐஸ் கம்பெனியில் அமோனியம் வாயு கசிவு; பெண் மயக்கம் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்
Published on

குளச்சல்,

குளச்சல் அருகே வாணியக்குடி மேட்டுகடை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான 2 ஐஸ் கம்பெனிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஐஸ் கம்பெனியில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ் கட்டிகளை குளச்சல் துறைமுகத்தை தங்கு தலமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு மீன்களை பதப்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இந்த கம்பெனியில் இரவும்பகலும் ஐஸ் கட்டிகள் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்றும் தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலை 7.30 மணியளவில் ஒரு ஐஸ் கம்பெனியில் இருந்து திடீரென்று அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டது.

இதனால், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சினை ஏற்பட்டது. அதைதொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அந்த வாயு அப்பகுதி முழுவதும் பரவியது. அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் வாயு கசிவினால், மூச்சு திணறல் பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால், பீதியடைந்த அவர்கள் உடனே, வீட்டில் இருந்து வெளியேறி வேறு பகுதியில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதற்கிடையே வாயு கசிவு பரவியதில் அப்பகுதியை சேர்ந்த சூசைமிக்கேல் மனைவி வசந்தகுமாரி (வயது 60) மயங்கி விழுந்தார். உடனே, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்கிசிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாயு கசிவு ஏற்பட்ட கம்பெனியின் முன் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி, கல்லூரி மாணவமாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வேறு பகுதிக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து அந்த வழியாக வானங்கள் செல்லாமல் இருக்க அப்பகுதி இளைஞர்கள் சாலையில் கற்களை வைத்து தடை செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலர் தேவராஜ் தலைமையிலான வீரர்கள் 3 வாகனங்களில் விரைந்து வந்து வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் அதன் அழுத்தத்தை குறைக்கும் வகையில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

மேலும், வாயு கசிவு ஏற்படாமல் இருக்க அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 4 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் வாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டது. இதுகுறித்து குளச்சல் போலீசார் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஐஸ் கம்பெனிகளை பாதுகாப்பாக செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற அசம்பாவித சம்பவம் ஏற்படும் போது இதனை கட்டுப்படுத்த பயிற்சி பெற்ற ஊழியர்களை பணியில் நியமிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com