திருச்சியில் ஆம்னி பஸ் நிலையம் செயல்பட தொடங்கியது

தமிழ்நாட்டின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி மாநகரம் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். பன்னாட்டு விமான நிலையம் இயங்கி வருகிறது.
திருச்சியில் ஆம்னி பஸ் நிலையம் செயல்பட தொடங்கியது
Published on

திருச்சி,

தமிழ்நாட்டின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி மாநகரம் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். பன்னாட்டு விமான நிலையம் இயங்கி வருகிறது. சென்னை தலைநகரை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்துக்கு வசதியாக திருச்சி மத்திய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் திருச்சியில் ஆம்னி பஸ்களுக்கென்று தனியாக நிரந்தர இடம் ஏதும் இல்லாமல் இருந்தது. ஆம்னி பஸ்கள் மத்திய பஸ் நிலையத்தை சுற்றிலும் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றி சென்று வந்தனர். இதனால், சிலநேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கும், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் தென்னக ரெயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் ஆம்னி பஸ்களை இயக்கும் இடமாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ஆம்னி பஸ் நிலையம் நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. காலையில் ஆம்னி பஸ்கள் தென்னக ரெயில்வேக்கு சொந்தமான இடத்துக்கு வந்து, அங்கிருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றன. புதிய ஆம்னி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான டிக்கெட்டை தென்னக ரெயில்வே நிலத்துக்கான ஒப்பந்ததாரர் ராயல் டி.தேவகுமார் வழங்க, அதை திருச்சி மாவட்ட ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் பாண்டிச்செல்வன், பொருளாளர் அருண்பாலாஜி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனியாக வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பஸ் நிலையம் பின்புறத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளே வருவதற்கும், நிறுத்துவதற்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக 200 பஸ்கள் வரை நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com