திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.53 ஆயிரம் சிக்கியது.
திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
Published on

சார் பதிவாளர் அலுவலகம்

திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பின்புறத்தில் திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழரசி என 8 பேர் கொண்ட குழுவினர் திடீரென உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கு பணியில் இருந்த திருவள்ளூர் சார் பதிவாளர்கள் சுமதி, உமாசங்கரி மற்றும் இணை சார் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

ரூ.53 ஆயிரம் சிக்கியது

அதைத்தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்காக வந்த அனைவரையும் உள்ளே வைத்து அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.53 ஆயிரத்து 140-ஐ லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு இருந்த முக்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர். இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் திடீர் சோதனையால் திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக திருவள்ளுவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் 3 மணி நேரம் அவதிக்கு உள்ளாக்கினார்கள்.

ஆர்.டி.ஓ. அலுவலகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழக-ஆந்திர எல்லைக்கான நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த சோதனைச்சாவடியில், ஒரு பகுதியாக ஆர்.டி.ஓ. அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகமானது ஆந்திரா வழியாக வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்கள் போன்றவற்றுக்கான அலுவலகங்கள் ஆகும்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

இந்த அலுவலகங்களிலும் நேற்று மாலை முதல் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாய் தயாள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தினர்.அங்கு உள்ள லாக்கர், பதிவேடுகள், பேட்டரி அறை, மேஜை டிராயர்கள் உள்பட பல்வேறு இடங்களில் கணக்கில் வராத பணம் ஏதேனும் உள்ளதா? என தொடர்ந்து ஆய்வு செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.26 ஆயிரத்து 700 கைப்பற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com