பெரம்பலூரில் 25-ந்தேதி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்

தமிழ்நாடு பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி ஆகிய போட்டிகள் பெரம்பலூரில் 25-ந்தேதியும், அரிய லூரில் 29-ந்தேதியும் நடக்கிறது
பெரம்பலூரில் 25-ந்தேதி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்
Published on

பெரம்பலூர்,

1967-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட, சட்டமன்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் நாள் தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பெயர் மாற்றப்பட்டது. வரும் ஜனவரி 14-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு நடந்து 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ்நாடு பொன் விழா ஆண்டாக தமிழக அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டின் பெருமையையும் தமிழர் பெருமையையும் அனைவரும் உணரும் வகையில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகளுக்கான தலைப்புகள், மொழியின் பெருமையினை உலகிற்கு எடுத்துரைத்த அறிஞர் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.கல்யாண சுந்தரனார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரின் படைப்புகளை அடியொற்றி அமையும். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற அனுமதிக்க பெறுவார்கள்.

மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்க பதக்கம், 2-ம் பரிசு ரூ.25 ஆயிரம், 4 கிராம் தங்கப்பதக்கம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 4 கிராம் தங்கப்பதக்கம் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50-வது ஆண்டு பொன்விழாவில் தமிழக முதல்-அமைச்சர் வழங்குவார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் 25-ந்தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். அரியலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் வருகிற 29-ந்தேதி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன் பெரம்பலூர் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டி நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

இந்த தகவல்களை பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com