அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சுகாதார செயலாளர் திடீர் ஆய்வு

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சுகாதார செயலாளர் திடீர் ஆய்வு
Published on

அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விபத்தில் காயமடைந்தவர்கள், விஷம் குடித்தவர்கள், பாம்பு கடி உள்ளிட்ட நோய்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவை நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள படுக்கைகள், ஆய்வகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் டயாலிசிஸ் பிரிவு, ரூ.4 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட கேத்லேப் மையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அவர் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் டீன் செல்வி மற்றும் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இந்த மருத்துவமனையை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். உயர்ரக சிகிச்சைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களுடன் கூடிய வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க வேண்டும். மருத்துவமனையில் குடிநீர் பிரச்சினை வராதபடி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆம்புலன்ஸ்கள் வந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மருத்துவமனை முன்பு மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதற்கு சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், துணை இயக்குனர் சுரேஷ், தாசில்தார் ரமேஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, துணை முதல்வர் முகம்மதுகனி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் துறை தலைவர்கள், டாக்டர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com