ராமேசுவரம் கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் தேரோட்டம் ரத்து

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம் கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் தேரோட்டம் ரத்து
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடித்திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 31- ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று கோவிலின் அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் காலை 11 மணியளவில் ஸ்ரீராம்குருக்கள் கொடியை ஏற்றினார். தொடர்ந்து கொடி மரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு கொடி மரத்திற்கும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவிலின் இணை ஆணையர் பொறுப்பு செல்லத்துரை, தக்கார் ராஜா குமரன்சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் ஜெயா, சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், மேலாளர் சீனிவாசன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காலை 9 மணிஅளவில் கொடியானது கோவிலின் யானை ராமலட்சுமி மீது வைக்கப்பட்டு மேளதாளத்துடன் கோவிலின் ரத வீதிகளை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கொரோனா ஊரடங்கால் நேற்று நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியை காணும் வகையில் கோவிலில் பணியாளர்கள், விழா நிகழ்வுகளை படம் பிடித்து பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் இந்த ஆண்டு 20-ந் தேதி ஆடி அமாவாசையன்று அக்னிதீர்த்த கடற்கரையில் நடைபெறும் சாமி தீர்த்தவாரியும், 25-ந் தேதி நடைபெறும் தேரோட்டம் மற்றும் 31-ந் தேதி நடைபெறும் சாமி, அம்பாள் கெந்தமாதனபர்வத மண்டகபடிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருகிற 26-ந் தேதி நடைபெறும் ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும் என்றும், திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் இணையதளம் மூலமாக நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com