அத்திவரதர் தரிசன நேரத்தில் நாளை மாற்றம் காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்

அத்திவரதர் தரிசன நேரத்தில் நாளை (புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
அத்திவரதர் தரிசன நேரத்தில் நாளை மாற்றம் காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வருகிற 1-ந்தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இதனால் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதேபோல் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை. டோனர் பாஸ், வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மதியம் 12 மணி வரையிலும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஆடிப்பூரம்

1-ந்தேதி அதிகாலை 5 மணியில் இருந்து எப்போதும்போல பக்தர்கள் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் மேலும் 3-ந்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால் அன்று மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம். அதேபோல் 15-ந்தேதி கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளதால் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

ஏற்கனவே 2 போலீஸ் ஐ.ஜி.க்கள், 3 டி.ஐ.ஜி.கள், ஒரு போக்குவரத்து டி.ஐ.ஜி., 16 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 48 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5,100 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் தினத்தில் மேலும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

இதற்கிடையே 29-வது நாளான நேற்று ஆரஞ்சு நிற பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

மேலும் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா குடும்பத்துடன், அத்திவரதரை தரிசனம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com