ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் ஜெய்ப்பூரில் கைது

கோவையில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்த கொள்ளை கும்பல் தலைவன் இஸ்லாமுதீனை ஜெய்ப்பூரில் காதலியை பார்க்க சென்றபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவன் ஜெய்ப்பூரில் கைது
Published on

கோவை,

கோவையில் கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி அதிகாலை பீளமேட்டில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களை வடமாநில கொள்ளையர்கள் உடைத்து அதில் இருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்தனர். கோவையில் இருந்து காரில் தப்பிச் சென்ற வடமாநில கொள்ளையர்கள் மற்ற மாவட்ட போலீசாரின் உதவியுடன் சிக்கினார்கள்.

அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோஷம்கான் (வயது 34), முபாரக் (30), சுபேர் (19), அரியானாவை சேர்ந்த மற்றொரு சுபேர் (33), அமீன் (34), அமித்குமார் (30), உத்தரபிரதேசத்தை சேர்ந்த முஸ்தாக் (32), பீகாரை சேர்ந்த சுல்பிஹீர் (25) என்பது தெரியவந்தது. கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கில் 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 8 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமீபத்தில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற சினிமா படத்தை போன்று கொள்ளையர்கள் லாரியில் தங்கியிருந்து ஏ.டி.எம். எந்திரங்களை உடைக்க உதவும் கியாஸ் வெல்டிங் எந்திரம் மற்றும் ஆயுதங்களை டீசல் டேங்கில் மறைத்து வைத்து கைவரிசை காட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளை சம்பவம் நடந்தபோது அந்த கும்பலின் தலைவன் இஸ்லாமுதீன் (வயது 43) அவனது காதலி கிரணும் காரில் தப்பிச் சென்றனர். கோவையில் 2 ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலிடம் இருந்து ரூ.3 லட்சத்தை மட்டுமே போலீசார் கைப்பற்றினார்கள். மீதி ரூ.27 லட்சத்துடன் கொள்ளை கும்பல் தலைவன் இஸ்லாமுதீன் தனது காதலியுடன் வந்த காரில் தப்பிச் சென்றான். இதைத் தொடர்ந்து இஸ்லாமுதீனை பிடிக்க போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் இஸ்லாமுதீன் சொந்த ஊரான அரியானாவிற்கு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அரியானா சென்றனர். ஆனால் போலீசார் வருவது தெரிந்ததும் இஸ்லாமுதீன் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பி சென்றான்.

இதைத் தொடர்ந்து இஸ்லாமுதீனை பற்றிய ரகசிய தகவல்களை தனிப்படை போலீசார் சேகரித்தனர். இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள காதலி கிரணின் வீட்டுக்கு இஸ்லாமுதீன் வருவதாக நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராஜஸ்தான் போலீசாரின் உதவியுடன் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை போன பணத்தில் ஒரு பகுதி பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இஸ்லாமுதீன் சொந்த ஊர் அரியானா என்றாலும் காதலியை தேடி எப்படியும் ஜெய்ப்பூர் வருவார் என்று போலீசார் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்காக காதலி கிரணின் வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் இஸ்லாமுதீன் வந்தால் தகவல் கொடுக்குமாறு கூறியிருந்தனர். அதன்பேரில் அவர்கள் கோவை தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் அது பற்றி கோவை போலீசார் ராஜஸ்தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தனிப்படை போலீசார் உடனடியாக நேற்று முன்தினம் இரவே விமானம் மூலம் அங்கு சென்று கொள்ளை கும்பல் தலைவனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com