

வேதாரண்யம்,
வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஆதித்யன் (வயது20). சம்பவத்தன்று அந்த பகுதியில் மின் கம்பம் நடுவதற்கு மின்சார துறையினர் ஏற்பாடு செய்தனர். அப்போது ஆதித்யன், தனது வீடு பக்கமாக மின் வயர் செல்ல கூடாது என கூறினார்.
இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த பாலசுந்தர் மற்றும் அவரது தம்பி ஆனந்தகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆதித்தியனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஊர் பஞ்சாயத்தார்கள் பேசி, ஆதித்யன் வீட்டு பக்கமாக வயர் இழுக்க வேண்டாம், பாலசுந்தர் வயல் பக்கமாக செல்லட்டும் என கூறினர்.
இதையடுத்து மின்கம்பம் நடப்பட்டு, மின் இணைப்பும் கொடுக்கப்பட்டது.
இதனால் பாலசுந்தர் குடும்பத்திற்கும், ஆதித்யனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று பாலசுந்தர், ஆனந்தகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆதித்யனை தரக்குறைவாக பேசியதுடன், உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த ஆதித்யன், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் ஆதித்யன் புகார் அளித்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாலசுந்தர் மற்றும் ஆனந்தகிருஷ்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.