பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனை

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5 விசாரணை கைதிகளிடம் இருந்து 3 செல்போன்கள், 3 சிம்கார்டுகள் சிக்கியது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனை
Published on

பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் அந்த ஜாமர் கருவிகள் செயல்படுவது இல்லை என்று தெரிகிறது. இதனால் சிறையில் உள்ள கைதிகள் சர்வசாதாரணமாக செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் ரவுடிகள் சிறையில் இருந்தபடியே தொழில்அதிபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

இந்த நிலையில், சிறையில் ஒரு கும்பல் செல்போன்களை கைதிகளிடம் பேச கொடுத்து பணம் வசூலிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கிஷோர் குமார் தலைமையிலான போலீசார் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். கைதிகள் தங்கியுள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின்போது செல்போன்கள், சிம் கார்டுகள் பயன்படுத்தியதாக விசாரணை கைதிகள் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் அருண் குமார், சரத், ரவிகுமார், மகேஷ் மற்றும் சேத்தன் குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் தங்களிடம் உள்ள செல்போன்களை பிற கைதிகளிடம் பேச கொடுப்பதோடு, அவர்கள் பேசும் நேரங்களை கணக்கிட்டு அதற்கு தகுந்தவாறு ரூ.100 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலித்ததும் தெரியவந்தது. பெரும்பாலான கைதிகள் சிறையில் இருந்தபடியே வீடியோகால் மூலம் பிறரை தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது.

விசாரணை கைதிகளிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 3 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருப்பினும், சிறையின் உள்ளே இருக்கும் அவர்களுக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் எப்படி கிடைத்தன? என்பது போலீசாருக்கு தெரியவில்லை.

இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், விசாரணை கைதிகள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com