பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சென்னை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Published on

வேளாங்கண்ணி ஆலய திருவிழா

சென்னை பெசன்ட்நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சென்னை-மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றினார். இந்த விழாவில் தேவாலயத்தின் அதிபரும், பங்குத்தந்தையுமான வின்சென்ட் சின்னதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.ஒவ்வொரு ஆண்டும் பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெறும். சென்னை மட்டுமன்றி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரை சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து கொடியேற்ற விழாவில் பங்கேற்பார்கள். இதன் காரணமாக பெசன்ட்நகர் கடற்கரையே பக்தர்கள் கூட்டத்தால் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில், வேளாங்கண்ணி திருத்தல திருவிழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பேராயர்கள், பங்குத்தந்தையர்கள் முன்னிலையிலேயே இந்த விழா நடந்தது.ஆனாலும் பக்தர்கள் நேற்று காலை முதலே திருத்தலத்துக்கு வருகை தந்தபடி இருந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருப்பி அனுப்பினர். அந்தவகையில் கடற்கரை சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

7-ந் தேதி தேர் திருவிழா

அன்னை வேளாங்கண்ணி திருத்தல கொடியேற்ற விழாவை பக்தர்கள் கண்டுகளிக்க ஏதுவாக யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், டி.வி. சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் திருவிழாவை பக்தர்கள் பார்த்தனர். இந்த திருவிழா வருகிற 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வான தேர்த்திருவிழா 7-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

முன்னதாக விழாவில் பங்கேற்ற பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நிருபர்களிடம் கூறுகையில், மனித வாழ்க்கையில் உள்ள சவால்களை இறைவனது உதவியுடன் சந்தித்து அவைகளில் இருந்து வெற்றிபெற முடியும் என்பதே இப்பெருவிழாவின் வேண்டுதல் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com