விவேகானந்தர்– திருவள்ளுவர் சிலைகளுக்கு இடையே பாலம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் ; கலெக்டர் உத்தரவு

கன்னியாகுமரியில் விவேகானந்தர்– திருவள்ளுவர் சிலைகளுக்கு இடையே பாலம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க பூம்புகார் கப்பல் கழகத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார்.
விவேகானந்தர்– திருவள்ளுவர் சிலைகளுக்கு இடையே பாலம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் ; கலெக்டர் உத்தரவு
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் முன்னேற்றம் குறித்து மாவட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பல்வேறு துறைகள் வாயிலாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும்முந்தைய ஆலோசனை கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தனித்தனியே கேட்டறிந்து, அதை செயல்படுத்துவதில் இடையூறுகள் இருப்பின் அதற்கான மாற்று ஆலோசனைகளை வழங்கியதோடு, வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும், தரமாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேலும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டுமென கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு குறைபாடு உள்ள இடங்களில் பணிகள் நடைபெறுவதற்கு சாலை பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய பாதுகாப்புடன் விரைந்து முடிக்க வேண்டும். கன்னியாகுமரி ரெயில் நிலையம் முதல் சுனாமி காலனி வரை பாதை அமைக்க தென்னக ரெயில்வே மூலம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்

குமரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் உருவாக்கிட மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலருக்கு அறிவுறை வழங்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி, மருதூர்குறிச்சி அகிராமத்தில் பழுதடைந்துள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய நான்கு வழித்தடங்களுடன் நடைபாதைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைந்து பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் திருவள்ளுவர் சிலைகளுக்கு இடையே பாலம் அமைக்கும் பணியினை விரைவில் தொடங்க பூம்புகார் கப்பல் கழக அலுவலர் அறிவுறுத்தப்பட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த், உதவி கலெக்டர் (பத்மநாபபுரம்) சரண்யா அரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, தென்னக ரெயில்வே திருவனந்தபுரம் செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் கட்டுமானம்) எழிலன், மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com