2050-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் 70 சதவீதம் கால்நடை உற்பத்தி மூலம் கிடைக்கும்

2050-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் 70 சதவீதம் கால்நடை உற்பத்தி மூலம் கிடைக்கும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலசந்திரன் கூறினார்.
2050-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் 70 சதவீதம் கால்நடை உற்பத்தி மூலம் கிடைக்கும்
Published on

நாமக்கல்,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கால்நடை இன விருத்தி கழகம் ஆகியவற்றின் சார்பில் நவீன இனப் பெருக்க உத்திகளை பயன்படுத்தி கால்நடைகளின் இனப் பெருக்க திறனை மேம்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்த சர்வதேச கருத்தரங்கம், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கினை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பாலசந்திரன் தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 48 ஆண்டுகளாக கால்நடைகளின் இனப் பெருக்கம் குறித்த தொழில்நுட்ப உத்திகளை இந்த அமைப்பு கால்நடை வளர்ப்போருக்கும், மாணவர்களுக்கும் வழங்கி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்பின் உத்திகளை இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

70 சதவீதம் கிடைக்கும்

தாய், சேய் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் ஈனியல் மற்றும் இனப்பெருக்க துறை விளங்கி வருகிறது. வருகிற 2050-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் 70 சதவீதம் கால்நடை உற்பத்தி மூலமாக கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. இதற்கு கால்நடைகளின் இனபெருக்கம் மற்றும் உற்பத்தி திறன் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

இந்த துறையை சார்ந்த வல்லுனர்கள் கால்நடைகளின் இனப்பெருக்கம் மற்றும் ஈனும் திறனை மேம்படுத்தும் வழிமுறைகளை காண வேண்டும். அவற்றின் உற்பத்திக்கு சத்தான தீவனங்கள், தாது உப்புகள் அவசியம் ஆகும்.

எருமை மாடுகள் அதிகளவு சினை பருவத்திற்கு வராதிருந்தல், சினை பிடித்தலை முன்னதாகவே கண்டறிதல், மடிநோய் மற்றும் பிற நோய்களினால் ஏற்படும் மலட்டுத்தன்மை உள்ளிட்டவை தற்போது கால்நடை அறிவியலாளர்கள் முன் உள்ள சவாலாகும். அதேபோல பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இனபெருக்க கோளாறுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாதுகாக்க முடியும்

சமீபத்திய இனப்பெருக்க உத்திகளை கால்நடை மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கற்றுக்கொண்டு எந்த தடையுமின்றி செயல்படுத்த வேண்டும். கால்நடை இனவிருத்தி அறிவியல் மூலம் உள்நாட்டு கால்நடை இனங்கள் மற்றும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். அதன் மூலம் சிறந்த சந்ததிகளை உற்பத்தி செய்ய முடியும். அழிவில் இருந்து வன விலங்கு இனங்களை காப்பாற்ற முடியும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு ஆகிய கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சிகிச்சை முறைகள் மற்றும் முடிவுகளை இந்த பல்கலைக்கழக அளவில் மட்டுமே இதுவரை பகிர்ந்து கொண்டனர். சமீபத்தில் இருந்து இந்திய அளவில் உள்ள பல்கலைக்கழக கல்லூரிகளிலும் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கருத்தரங்கில் கர்நாடக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுரேஷ் ஹொன்னப்பாகோல், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மோகன், இந்திய கால்நடை இனவிருத்தி கழக செயலாளர் டாக்டர் சிவபிரசாத், ஈனியல் துறை பேராசிரியர் டாக்டர் செல்வராஜி, சிகிச்சை துறை தலைவர் டாக்டர் இசக்கியல் நெப்போலியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் அமெரிக்கா, கனடா நாட்டு கால்நடை விஞ்ஞானிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com