ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் - குமாரசாமி பேட்டி

ஊரடங்கு உத்தரவால் கர்நாடகத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று குமாரசாமி தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் - குமாரசாமி பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ராமநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் ராமநகர் மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராமநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இந்த மாவட்டத்தில் இதுவரை வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.

ராமநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மொத்தம் 26 டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். 4 இடங்கள் காலியாக உள்ளன. டாக்டர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனாவை தடுக்க மாவட்ட கலெக்டர் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவது குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். வேளாண்மை சந்தைகளில் விவசாயிகளுக்கு தொந்தரவு ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.

பெலகாவியில் ஒரு விவசாயி தான் சாகுபடி செய்த விளைபொருட்களை விற்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராமநகரில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. பட்டு விவசாயிகள், தோட்டக்கலை விவசாயிகளின் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் வலியுறுத்தியுள்ளேன்.

மதுபானத்திற்கு அடிமையானவர்கள், மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் உடல்நலனில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். அதாவது மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com