திருச்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பலி 8 பேர் படுகாயம்

திருச்சி அருகே கார்-லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பலி 8 பேர் படுகாயம்
Published on

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம், கீழசெவல்பட்டி பகுதி பி.அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன். இவர் கோவில்கள் மற்றும் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார். சென்னையில் அய்யப்பன் கோவில் பஜனை அலங்கார பூஜைக்காக தனது மகன்கள் திலக்சீனிவாசன், சர்வேஸ்வரன் மற்றும் உறவினர்களுடன் காரில் சென்னைக்கு சென்றார்.

காரை ஆலங்குடியை சேர்ந்த டிரைவர் சதீஷ்(19) ஓட்டினார். இதில் அழகப்பனும், டிரைவர் சதீசும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் சென்னையில் வேலைகள் முடிந்ததும், அழகப்பன் உள்பட 8 பேரும் அங்கிருந்து காரில் கோவைக்கு மற்றொரு நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர்.

2 பேர் பலி

இந்த நிலையில் நேற்று காலை திருச்சி-நாமக்கல் மெயின்ரோட்டில் முசிறியை அடுத்த செவந்தலிங்கபுரம் அருகே அந்த காரும், அந்த வழியாக கோவையில் இருந்து வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதனால் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. லாரியின் முன்பகுதியும் உருக்குலைந்தது. இதில் அழகப்பன் மற்றும் டிரைவர் சதீஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

8 பேர் படுகாயம்

மேலும் காரில் பயணம் செய்த அழகப்பனின் மகன்கள் திலக்சீனிவாசன் (19), சர்வேஸ்வரன் (18), உறவினர்கள் லலிதா (40), சண்முகவள்ளி (10), சண்முகநாதன் (8), ராம் (20) மற்றும் லாரி டிரைவர் செந்தில்குமார்(49), அவருடைய மகன் அஜீத்தினா(10) ஆகிய 8 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்தனர்.

அங்கு, காருக்குள் சிக்கி இருந்தவர்களையும், லாரியில் இருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், அழகப்பன், சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com